Pages

Friday, 15 March 2013

பாலாவின் பரதேசி - விமர்சனம்

மிழ் சினிமா வரலாற்றில், ஏன் இந்திய சினிமா வரலாற்றில் திரைப்பட கலையின் உச்சகட்டத்தை தொட்ட மிகச்சில படங்களில் இந்த பரதேசியும் ஒன்று.
தமிழர்களாகிய நாம் தினம் தினம் 3 முறை, 6 முறை அதுக்கும் மேலே என இஷ்டத்துக்கு அருந்தும்  டீ-க்குப் பின்னால், அது எப்படி நம்மீது திணிக்கப்பட்டது.. அதற்காக அப்பாவி ஏழை மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்.. எப்படி வஞ்சிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கதை இருக்கிறது என்பதே மிரட்சியாய் இருக்கிறது.
ஒரு வருமானமில்லாத சுதந்திரமான ஏழைகளாய் ஆட்டம், பாட்டம், கேலி கூத்து என வாழ்ந்தவர்கள் வருமானத்தை தேடும் சூழ்நிலையில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் கொடூரமாய் கொத்தடிமைகளாய் மாற்றப்பட்டார்கள் என்பதை ஒரு நெஞ்சைக் கசக்கிப்பிழியும் அனுபவமாய் தருகிறார் பாலா.
கஷ்டப்படும் ஏழைகளுக்கு வேலை தரும் பெரிய மனிதர் கருங்காணியாய் வரும் அந்த நடிகரின்(ஜெர்ரி.. உல்லாசம், விசில் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரியில் ஜெர்ரி) சிரிப்பில் துவங்குகிறது அந்த பச்சைத் துரோகம். 48 நாட்களாய் நடந்து டீ எஸ்டேட்டுக்கு போகும் அந்த பயணமும் அதன் பின்னனியில் வரும் பாடல் வரிகளும் பஞ்சம் பிழைக்கப் போவதன் வேதணையை அப்பட்டமாய் காட்டுகின்றன. அதனைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த ஒவ்வொரு நிமிடமும் நம்மை உலுக்கும் காட்சிகள். டீ எஸ்டேட்டுக்கு வந்துவிட்டோம்.
இனி எல்லாம் நல்லபடியாய் இருக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றப்படும் விஷம் தான் மொத்தக்கதையும். அதை விவரிப்பது நியாயமில்லை. பார்த்தால் மட்டுமே அந்த அனுபவம் புரியும்.

ஒரு சிறந்த படம் ரசிகனை என்ன செய்துவிட முடியும்? பார்ப்பவனை கதைக்குள் இழுந்து, உணர்வுகளை உள்வாங்கச்செய்து, நெஞ்சைப் பிழிந்து, கலங்கடித்து, அந்தக்கதையின் வாழ்க்கையை நாமும் வாழ்வதைப்போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்து.. அந்த சுக துக்கங்களை நம்மையும் உணரச்செய்து.. நாம் இதுவரை அலட்சியமாய் இருந்த சில விசயங்களையும் நமக்கு உணர்த்தி, சில நேரங்களில் நம்மை நாமே கேள்வி கேட்க வைத்து, போகப்போக எந்தக் கேள்வியும் இல்லாமல் படத்தை மெய்மறந்து பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். அப்படி ஒரு படத்தை எடுக்க மிகச்சிறந்த ஒரு கலைஞனால் தான் முடியும். தான் அத்தகைய கலைஞன்தான் என மீண்டும் நீரூபித்து, நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்களில் சற்று கீழே இறங்கியிருந்த பாலா இந்த பரதேசி மூலம் சிம்மாசனத்தில் ஏறியமர்கிறார்.
அதர்வாவுக்கு இந்த ஒரு படம் போதும். கடைசி காட்சியில் அவரின் கதறல் ஒன்றே போதும்.. சில பல விருதுகளை அள்ளிக்குவிக்க. விக்ரம், சூர்யா வரிசையில் தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராய் இவரையும் மாற்றிவிட்டார் பாலா.
வேதிகாவா இது. ட்ரையிலரில் பார்த்திருந்தாலும் படத்தில் முழு காட்சிகளில் பார்க்கும் போது இப்பவும் அவரின் உண்மையான முகத்துடன் இந்த முகத்தை ஒப்பிட்டே பார்க்க முடியாத அளவுக்கு மாற்றம். துறுதுறுவென அதர்வாவை துரத்திக் காதலிப்பதில் உற்சாகமாய் இருக்கிறார்.
தன்ஷிகாவுக்கு நல்ல அழுத்தமான பாத்திரம். கண்களாலேயே பல அர்த்தங்களை பேசி விடுகிறார். தொடர்ந்து பல தரமான படங்கள் இவரைத் தேடி வருவது கவனிக்கத்தக்கது.
உலகத்தரமான படமென்றால் அது ஏதோ ஹாலிவுட் படங்களின் லொகேசன்களையும், ஷாட்களையும், அவர்களின் கருத்துக்களையும் அப்படியே எடுத்து ஒப்பிப்பதில்லை.. நம் கதையை படமாக்கி அதை உலகமே பார்க்கச்செய்வது என கமலஹாசனுக்கும் பாடம் எடுக்கிறார் இந்த பாலா.
அந்தனை நடிகர்களும் நடிப்பை பற்றிய நினைப்பேயில்லாமல் படம் பார்க்க வைக்கிறார்கள். செழியனின் கேமரா முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை கதையை இன்னும் கணமாக்கித்தருகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தின் தரத்தையறிந்து அதற்கேயுரித்தான இசையை பிரம்மாதமாய் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படம் தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமில்லை உலகில் எங்கேல்லாம் சினிமா ரசிக்கப்படுகிறதோ அங்கே எல்லாம் கௌரவிக்கப்படவேண்டிய படைப்பு.

இனி ஒவ்வொரு முறை டீ குடிக்கும் போதும் கொஞ்சம் உறுத்தல் வரத்தான் செய்யும். கேரளாவுக்கு டூர் போய் அந்த தேயிலைத்தோட்டங்களை பார்க்கும் போது வியப்பைத்தாண்டிய ஒரு வேதனை வரத்தான் செய்யும்.

No comments:

Post a Comment