Pages

Friday, 15 March 2013

ஒன்பதுல குரு - விமர்சனம்


சில படங்களில் பழைய ஹிட்டான படங்களின் பாடல்களை அல்லது காட்சிகளை அல்லது வசனத்தை அல்லது பெயர்களை என ஆங்காங்கே காமெடிக்காக பயன்படுத்துவார்கள். அதை இந்தப் படத்தின் டைரக்டர்(பி.ஆர்.ஓ வாக இருந்து டைரக்டரான) பி.டி.செல்வக்குமார் ரொம்ப நாளாய் கவனித்திருப்பார் போலிருக்கிறது.
ஓ காமெடின்னா அது இதுதானா என கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் நானும் ஒரு காமெடிப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் இதுவரை வந்த தமிழ்சினிமாக்களின் ஒட்டுமொத்த டைரக்டரியை எடுத்துக்கொண்டு, அதில் வரும் பெயர்கள், காட்சிகள், வசனங்கள், ஷாட்கள், காஸ்ட்யூம்கள், இன்னபிற சமாச்சாரங்கள் என சகட்டுமேனிக்கு எடுத்து ரெண்டரை மணி நேரத்துக்கு ரொப்பி இதுவும் ஒரு படம் நானும் ஒரு டைரக்டர் என வந்து நிற்கிறார். நமக்கெண்ணவோ "ஏய் பாத்துக்க நானும் ரவுடி நானும் ரவுடி" என்ற வடிவேலுவின் குரல்தான் காதுக்குள் ஒலிக்கிறது.

பில்லா, ரங்கா, கோச்சடையான், குரு என நாலு நண்பர்களாம்(அதாவது 4 இடியட்ஸாம்). ரங்கா எனப்படும் சத்யன் ஓப்பனிங்கில் காக்க காக்க உயிரின் உயிரே பாடல் ஒலிக்க அதே உடையில் ஒரு பொண்ணை பீச்சில் துரத்திக்கொண்டு, தாவி மண்ணில் விழுந்துகொண்டு என.. அது கனவாம். விழித்தால் அவரது மனைவியான அந்தப்பெண் சூர்யாவுக்கு ஆசைப்பட்டு முடியாமல் சத்யனை கல்யாணம் பண்ணிக்கொண்டாராம். சத்யனை சூர்யா போல 6 பேக் கொண்டுவருவதற்காக அந்தப் பொண்ணும் அவரது அம்மாவான பழைய நாயகி மந்த்ராவும் சத்யனை யோகா, ஜிம் என டார்ச்செர் பண்ணுகிறார்களாம். அவர்கள் வீட்டில் அடிமையாய் வாழ்ந்து புலம்பிக்கொண்டிருக்கும் இந்த ரங்கா சத்யன் ஒரு புறம்.

கோச்சடையானாய் வரும் அரவிந்த் ஆகாஷ். ரொம்ப மாடர்னான ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்க, அந்தப் பெண் வீட்டுக்குள்ளேயே ஏதோ குத்தாட்ட நடிகை போல உடையுடுத்திக்கொண்டு, பீட்சா ஆர்டர் பண்ணி சாப்பிட்டிக்கொண்டிருக்க அரவிந்தின் அப்பாவுக்கு அந்தப் பொண்ணை புடிக்கவேயில்லை. மனைவியும், அப்பாவும் இரு பக்கமாய் நின்று யார் வேண்டும் என கேட்க யாருமே வேணாம் என்று விட்டு சரக்கடித்து ஃப்ளாட்டாகி கிடக்க, அப்படி கிடக்கும் போதும் காக்க காக்க ஓப்பனிங் சீனை இமிடேட் பண்ணுகிறார். இவர் ஒரு பக்கம்.

பில்லா எனப்டும் வினய்.. பல இடங்களில் அஜீத்தின் பில்லா சீன்களை மொக்கையாய் இமிடேட் செய்து காமெடி பண்றேன் எனக் கடுப்பேத்திவிட்டு கடைசியில் வேலு நாயக்கர் வீட்டு கல்யாணத்தில் மாப்பிள்ளை ஓடிவிட சொத்துக்காக வினய்யின் அப்பா வினய்யை மாப்பிள்ளையாக்க ரொம்ப குண்டான பெண்ணை கட்டிக்கொண்டு புலம்பித்தள்ளுகிறார் இன்னொரு புறம்.

இவர்களோடு கொஞ்சம் தூரத்து நன்பரான சார்லஸ்(பிரேம்ஜி அமரன்) அவரது டீச்சரான சோனாவை கரெக்ட் பண்ணி அக்னி நட்சத்திரத்தில் வரும் அந்த நிரோஷாவின் பீச் பாடலை இமிடேட் செய்து பின் பாரதிராஜாவின் படங்கல் சிலவற்றிலிருந்து சீன்களை உப்புமா பண்ணிவிட்டு, இருவரும் ஓடிப்போக முடிவு பண்ணி அடுத்த நான் சென்ட்ரல் ஸ்டேசனில் சந்திக்க முடிவு. சில லட்சங்கள் பண உதவி கேட்கும் பிரேம்ஜிக்கு இந்த பில்லா, ரங்கா, கோச்சடையான் கோஷ்டி தருவதாய் சொல்லி கடைசியில் காசில்லை என காமெடி பண்ணிவிட, பிரேம்ஜிக்காக 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க பொருமையில்லாத சோனோ இன்னொரு சோனங்கியுடன் செட்டிலாக.. விரக்தியான பிரேம்ஜி மனமுடைந்து சேலஞ்ச் செய்துவிட்டு காணாமல் போகிறார்.

குரு எனப்படும் சாம்ஸ். அவருக்கு கல்யாணம்.. ஆனால் மற்ற 3 நன்பர்களும் மனைவிகளை விட்டு விட்டு பேச்சிலர்களாய் வாழலாம் என முடிவெடுத்து பெங்களூர் போக முடிவெடுக்க, சாம்ஸும் கூட இணைந்து கொள்ள..
இரண்டாவது பாதியில் பெங்களூர் போய் நடக்கும் கண்றாவி காட்சிகளை நீங்கள் தியேட்டரில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்.

நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். இதுவரை பலவிதமான மொக்கை படங்களை பார்த்திருக்கிறேன். இருக்கதுலயே படு த்ராபையான படங்களையெல்லாம் பார்த்தவன் என பெருமைப்பட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்பது இன்றுதான் புரிந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே படு மொக்கையான படத்திற்கான இலக்கணத்தை மாற்றியமைத்து மொக்கைகளின் முடிசூடா மன்னன் பட்டத்தை பெற்று முதலிடத்தைப் பிடிக்கிறது இந்த ஒன்பதுல குரு படம். இதைப் படம்னு சொல்றதுக்கே கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கு.

'தமிழ்படத்'துல பல படங்களை ஓட்டி ஜெயிச்சுட்டாங்க.. நாமளும் அந்த மாதிரி ஒண்ண பண்ணிடலாம்னு நினைச்சிருப்பாங்க போல. பாவம்.. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி ஆயிடுச்சு கதை. சாரி இந்தப் படத்தை பத்தி பேசும் போது கதை என்ற வார்த்தையெல்லாம் உபயோகப்படுத்தக்கூடாது. அதற்கான வாசணையே இங்கு இல்லை. அப்புறம் எங்கே திரைக்கதையெல்லாம்.

ஏதோ ஏமாந்து தியேட்டருக்குள்ள வந்துட்டோம்ங்கிற ஒரே காரணத்துக்காக இப்படி 20 தடவை ஷேவ் பண்ண ப்ளேடு, துருப்பிடிச்ச ஆக்ஸா ப்ளேடு, பழைய ரம்பம், மழுங்கிப்போன உழி, மாஞ்சாக்கயிறு என எல்லாவித ஆயுதங்களோடும் சகட்டுமேனிக்கு நம்மை அறுத்துத்தள்ளிகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்தால் ஒரு நிமிடம் ரத்த ஆறு ஓடுவதைப் போல ஒரு பிரம்மை வரத்தான் செய்கிறது.
இந்தப்படத்தின் ஓப்பனிங் பாடலில் வரும் பவர்ஸ்டாருக்கு வேண்டுமானால் ஒன்பதில் குரு இருக்கலாம். ஆனால் படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கும் படம் பார்க்கும் நமக்கும் எல்லாப்பக்கமும் ஏழரை தான். இதுல பார்ட் 2 வேற வருதுன்னு கடைசில ஒரு குண்டத்தூக்கி போடுறாங்க பாருங்க...ஷ்பாஆஆஆ. நெசமாத்தான் சொல்றாங்களா இல்ல விஸ்வரூபம் படத்தை கிண்டல் பண்றாங்களாண்ணு தெரியலை. கடவுள்தான் காப்பாத்தனும்.

No comments:

Post a Comment